உணவின்றி தவிக்கும் செங்கல்பட்டு மாவட்டம் கீரபாக்கம் கிராம இருளர் மற்றும் கல்லுடைக்கும் தொழிலாளர்


செங்கல்பட்டு, மே 12: கீரப்பாக்கம் ஊராட்சியில் கொரோனாவால் சாகிறோமோ இல்லையோ பசி பட்டினியால் செத்து விடுவோம் என இருளர் மற்றும் கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் கதறுகின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுக்கா, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், பெரிய அருங்கால் சின்ன அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி நாடு முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் வருகிற 17-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பக்கப்பட்டுள்ளது.  இதில் அன்றாடம் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள இருளர் மற்றும் கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இங்கு கொரோனா வைரஸ் தொற்று நோயால் நாங்கள் சாகிறோமோ இல்லையோ அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பசி பட்டினியால் செத்து விடுவோம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, ஊமை மாரியம்மன் கோவில் தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, பாபா சாகிப் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 75இருளர் மற்றும் 225கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் கல்லுடைக்கும் தொழிலையே பெரிதும் நாங்கள் நம்பி வந்தோம். இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதனால் அன்றாடம் வயிற்று பிழைப்புக்காக ஹவுஸ் கீப்பிங், கட்டிட தொழில் என பல்வேறு கூலி வேலைக்கு சென்று வந்தோம். மேலும் தினந்தோறும் வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு சாப்பாடு. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நோயால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எந்த ஒரு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளோம். இதில் தமிழக அரசு மூலம் ரேஷன் கடையில் கொடுக்கப்படும் ரேஷன் அரிசியும் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் மத்திய அரசு மூலம் வழங்கப்படும் கூடுதல் அரிசியை எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் தற்போது அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றோம். எங்களை தேடி யாராவது வந்து உதவி செய்வார்களா? என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இதுவரை யாருமே எங்களை தேடி வந்து ஒரு உதவி கூட செய்யவில்லை. தற்போது மேற்படி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் நாங்கள் சாகிறோமோ இல்லையோ அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பசி பட்டினியால் செத்து விடுவோம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவே இதுகுறித்து தமிழக அரசு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எங்களை தேடி வந்து உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


Post a Comment

புதியது பழையவை