கொரோனா-வால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கச் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க உள்ளது மோடி தலைமையிலான அரசு. இந்த முக்கியமான அறிவிப்பைச் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மோடி வீடியோ வாயிலாகப் பேசும் போது அறிவித்தார். இந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில், சமீப காலத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியத் துறைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் இத்திட்டம் Aatmanirbhar Bharat என்ற பெயரில் இயங்க உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார்
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் உடன் 4வது முறையாக மீண்டும் ஊரடங்கும் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் மே 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அடுத்த சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என்றும், இதை விளக்கமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பார் என்றும் பிரதமர் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கொரோனவால் வர்த்தகத்தையும், வருவாயும் இழந்து நிற்கும் பல ஆயிரம் நிறுவனங்களை மீட்க உதவும். இன்னும் சில நிறுவனங்கள் திவால் ஆகும் நிலையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது,
10 சதவீத ஜிடிபி
மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் என்பது இந்திய ஜடிபி-யில் 10 சதவீதம், இந்தச் சிறப்புப் பொருளாதார மீட்பு திட்டத்தில் நிலம், வேலைவாய்ப்பு, பணப்புழக்கம் மற்றும் சட்டவிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கிட்டத்தட்ட இந்த 20 லட்சம் கோடி ரூபாய் என்பது நாட்டின் நிகர வரி வருமானம்.
இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் மூலம் முடங்கியிருக்கும் வர்த்தகச் சந்தை மீண்டு எழுவதற்கும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும், மேக் இன் இந்தியா திட்டத்தை வலிமைப்படுத்துவதற்குப் பெரிய அளவில் உதவும் எனத் தெரிகிறது.
5 தூண்கள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உலகத் தர கட்டுமான திட்டம், தொழில்நுட்ப அடிப்படையிலான விநியோக முறை, இளைய தலைமுறையினருக்கு முக்கியத்துவம், உள்நாட்டுத் தேவையை வர்த்தகமாக்கும் முயற்சி ஆகிய 5 முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு தான் இப்புதிய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
5வது கூட்டம்
கொரோனா தொற்று இந்தியாவில் துவங்கிய நாள் முதல் இன்று வரையில் சுமார் 5 முறை பிரதமர் மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் பெறப்பட்ட கோரிக்கைகளும் கருத்தில் கொண்டு தான் இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் கோரிக்கை
மாநில அரசுகள் மத்திய அரசிடம், சிறு குறு நிறுவனங்களுக்கு உதவி, மின்சாரம் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துதல், கடன் மீதான வட்டி குறைப்பு, விவசாய உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிப்புக்கான நடவடிக்கை ஆகியவற்றை முக்கியக் கோரிக்கையாக முன்வைத்துள்ளது.
கருத்துரையிடுக