செஞ்சியில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை! அமைச்சர் மஸ்தான் திறந்து வைப்பு!!

 

தமிழ்நாடு அரசால்  1999 ஆண்டு காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. 

இந்த உழவர் சந்தை கடந்த 7-ஆண்டுகலாக செயல்படாத நிலையில், தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகம் முழுவதும் செயலில் இல்லாத உழவர் சந்தைகளை விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த உழவர் சந்தை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.14, இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்  த.மோகன் அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் திறந்து வைத்தார். 

செஞ்சியில் 26/02/2009 அன்று 24 கடைகளுடன் இன்றைய  மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட உழவர்சந்தை தற்போது முழுவதும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 

நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 வரையிலான விவசாயிகள் மூலம் 3 முதல் 4 டன் வரையிலான விற்பனை பொருட்கள் விற்பனை மேற்கொள்ளவும், 300 முதல் 400 வரையிலான நுகர்வோர் பயன்பெறும் வகையில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையினை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

புதுப்பிக்கப்பட்ட உழவர்சந்தையினை திறந்துவைத்து அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்  பேசியதாவது கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் விவசாயத்தினை காத்திடும் பொருட்டு இலவச மின்சார திட்டத்தை அறிவித்து 

விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றினார், கலைஞர் அவர்களின் நல்வழியில் நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வேளாண்மைத் துறைகென்று ஒரு நிதி நிலை அறிக்கையை தயார் செய்து தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் நலனைக் காத்திடும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது, மேலும் சிறு மற்றும் குறு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு உழவர் சந்தை வாயிலாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ள பேருதவியாக அமையும் என அமைச்சர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனை மேற்கொள்ள ஏதுவாக 15 விவசாயிகளுக்கு அடையாள அட்டையினையும், வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மானியத்துடன் 30 நபர்களுக்கு ரூ.1,25,714/- மதிப்பீட்டில் மழைத்தூவான் கருவி, தெளிப்புநீர் பாசன கருவி, பயிர் பாதுகாப்பு கருவி(விசை தெளிப்பான்), உளுந்து விதை, உயிர் உரம், கோணவீடர் மற்றும் பேக்ட் ஆர்கானிக் உரம் மற்றும் திரவ நானோ யூரியா உள்ளிட்ட பொருட்களையும், தோட்டக்கலைத்துறை சார்பாக மானியத்துடன் 7- நபர்களுக்கு ரூ.6,64,500/- மதிப்பீட்டில் நழல் வலைக் கூடில் பணி ஆணை, நிரந்தர பந்தல் பணி ஆணை, சிப்பம் கட்டும் அறை மற்றும் சின்ன வெங்காயம் விதை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் திரு.இரமணன், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) திருமதி.G.கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, செஞ்சி வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மூ.கருப்பையா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


                       செய்தியாளர்: த.மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை