நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் இணைய பதிவு செய்யலாம்! தமிழக அரசு அறிவிப்பு!!


 விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மத்திய அரசு நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து 01.01.2022 முதல் இந்த முறை அமலுக்கு வந்தது..

இதற்காக விவசாயிகள் www.tncsc.tn.gov.in, www.tncsc-edpc.in என்ற இணையதளங்கள் வாயிலாகவோ அல்லது இ‍‍‍-சேவை மையத்தின் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்; ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் ஆவணம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 போன்ற ஆவணங்களுடன் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு முறையில் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய, நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் சமர்ப்பித்தால் இணைய வழியில் பதிவேற்றம் செய்து, முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர்கள் இணைய பட்டியல் எழுத்தர்கள், இணைய வழியில் பதிவேற்றம் செய்து டோக்கன் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கொள்முதல் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மண்டல மேலாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை