உயிராற்றல் வேளாண்மை மற்றும் கொம்பு சாண உரம் தயாரிக்கும் களப் பயிற்சி

 காரைக்கால் மாவட்டம், மேல பொன்பேத்தி கிராமத்தில், இயற்கை விவசாயி திரு. ராஜேந்திரன் அவர்கள் இல்லத்தில் உயிராற்றல் வேளாண்மை மற்றும் கொம்பு சாண உரம் தயாரிக்கும் பயிற்சி குறித்து விவசாயிகளுக்கும் மாணவ மாணவியருக்கும் செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.


செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் இணைப் பேராசிரியர் டாக்டர். எஸ். ஆனந்த்குமார் நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கினார்.

  புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் திரு. ராஜ வேணுகோபால் அவர்கள் விவசாயிகளுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் விரிவான  செயல்விளக்க பயிற்சி அளித்தார்.

பயிற்சியின் போது தொடக்கவுரை ஆற்றிய இணைப் பேராசிரியர் டாக்டர். எஸ். ஆனந்த்குமார் பேசும்போது ஒரு சில ஆய்வு முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் மண் வளம் வெகுவாக  குறைந்ததால் விளைத்திறன் இழந்துவரும் நிலையை பார்க்கமுடிகிறது. அதனால் எவ்வளவு இடுபொருட்களை மண்ணுக்கு இட்டாலும், பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் வியாதிகள்  போன்றவற்றாலும், மண்ணில் சமநிலையற்ற நுண்ணூட்டச்சத்து தட்டுப்பாட்டாலும் நல்ல மகசூல் கிடைப்பதில்லை என்ற பிரச்சனையை பல விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.  அடிப்படையில், மண்ணில் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் எண்ணிக்கையில் மடிந்ததே காரணம். உயிருள்ளதே மண் என்பார்கள். அத்தகைய உயிராற்றலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய தேடல் விவசாயிகளிடம் இருந்தால் இப்பிரச்சனைகளுக்கு அவர்கள் தீர்வுகாணலாம் என்றார்.

அதை தொடர்ந்து திரு. ராஜ வேணுகோபால் பேசுகையில் மண்ணில் உள்ள அனைத்து உயிரினங்களும் மறுபடியும் அதிக அளவில் பெறுக, பிரபஞ்ச சக்தியையும், இயற்கையின் ஐம்பூத ஆற்றல்களையும் கிரகித்து ஊட்டமேற்றப்பட்ட உயிர் சக்தி நிறைந்த உரங்களை நாமே தயாரித்து வேளாண்மையில் பயன்படுத்தும் நுட்பங்களின் முறைமையை உள்ளடக்கியதே இயற்கை உயிராற்றல் வேளாண்மையாகும்  என்றார். மண் வளத்தை மேம்படுத்துவதற்கும், தரமற்ற மண்ணைப் புதுப்பிப்பதற்கும் உயிராற்றல் உரங்கள் உதவும். உதாரணமாக, செப்டம்பர் அக்டோபர் மழைக்காலங்களில், ஏற்கனவே இயற்கையாக இறந்த நாட்டு பசுமாட்டுக் கொம்பில் பசுஞ்சாணத்தை நிரப்பி மண்ணில் இரண்டரை அடி அகலம் மற்றும் ஆழம், தேவையான நீளம் கொண்ட குழி தோண்டி, எரு பரப்பி, அதன் மேல் சாணம் திணிக்கப்பட்ட கொம்புகளை மேல்நோக்கி மேற்கு திசை பார்த்து கீழ்நோக்கு நாளில் நட்டு, ஆறு மாத காலத்திற்கு பின் அதிலிருந்து கிடைப்பதே உயிர்சக்தி 500 எனப்படும்  கொம்பு சாண உரம் ஆகும். மேலும்நொறுக்கப்பட்ட முட்டை ஓடு மற்றும் பசால்ட் தூசியுடன் கலந்த மாட்டு எருவை, செங்கற்களால் வரிசையாக 12 அங்குல ஆழமான குழிக்குள் போடப்பட்டு, உயிர்சக்தி 502 முதல் 507 வரை எண்ணிட்ட உரங்களோடு  சேர்த்து, 3 முதல் 4 மாதங்கள் வரை புளிக்கவைக்கப்பட்ட பின் கிடைப்பதே மூலிகை சாண உரமாகும். இவற்றை பயன்படுத்தி குறைந்த செலவில் மண்ணில் உயிராற்றல் சக்திகளை பெருக்கி மண் வளத்தை மேம்படுத்தி அதன் மூலம் பயிர் மற்றும் காய்கனிகளின் மகசூல் மற்றும் தரத்தை அதிகரிப்பதே உயிராற்றல் வேளாண்மையின் நோக்கமாகும் என்றார் அவர்.. படிப்படியாகவும் விளக்கத்தோடும் கொம்பு சாண உரம் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கும், மாணவ மாணவியருக்கும் திரு. ராஜ வேணுகோபால் செய்துகாட்டினார்.

 நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, மனக்காடு பகுதியை சேர்ந்த இயற்கை விவசாய மகளிர் சங்க தலைவி திருமதி. சித்ரா அவர்களது சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

 காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு  கிராமங்களிலிருந்து வந்த  தீவிர விவசாயிகளான திரு. குமணன், திரு. தியாகராஜன், திரு. வீரப்பிள்ளை, திரு. முருகவேல், மற்றும் திரு. மணிகண்டன் உள்ளிட்ட  சுமார் 40-கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.

 அதுமட்டுமல்லாமல், கல்லூரியில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயின்று, காரைக்கால் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஊரக மற்றும் வேளாண் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வரும் 44 மாணவ மாணவியரும் இந்த பயிற்சியில்  பங்கேற்று பயனடைந்தனர். பயிற்சியில்  பங்கேற்ற விவசாயிகளுக்கும், மாணவ மாணவியருக்கும் புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. ராஜ வேணுகோபால்  சான்றிதழ்களை  வழங்கினார்.

முன்னதாக மாணவர் பிரசன்னா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும்  பணியையும்  மாணவ மாணவியர் கௌசல்யா, நர்மதா, அசீமுதீன், அஸ்வத், தேசியா, தமிழ்க்குமரன், சந்திரமௌலீஸ்வரன், ரெக்ஸ்லின் மேரி ஆகியோர் செய்திருந்தனர்.

இறுதியில் மாணவர் சாமிநாதன் அனைவருக்கும் நன்றியுரைத்தார்.

Post a Comment

புதியது பழையவை