இனி நியாய விலை கடைகள் மாலை 6-மணி வரை செயல்படும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

 
                   மிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதில் நடைபெறும் மோசடியை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு வாங்குவதாக குறுஞ்செய்தி வருவதாக பல்வேறு புகார்கள் மக்கள் தரப்பில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை.

இதன்காரணமாக அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு தீர்வாக கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில்‌ உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன்‌ தவறாது இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட வேண்டும்‌ என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர, இதர பணி நாட்களில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே நியாய விலைக் கடைகள் ஒவ்வொரு பணி நாட்களிலும் செயல்படும் வேலை நேரம் தொடர்பான விவரங்கள், 2018 மக்கள் சாசனத்தில் திருத்தங்கள் செய்து வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் 

  * சென்னை புறநகர் பகுதிகளில், காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், 

  * தமிழகத்தின் இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

மேலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் பெரும்பாலன நியாய விலைக் கடைகளில் பின்பற்றப்படுவதில்லை என்றும், மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து தெரிவித்து, குறித்த நேரத்தில் நியாய விலைக் கடைகளை திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்வும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் நியாய விலைக் கடையின் தகவல் பலகையில் காட்சிபடுத்த வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து, குறித்த நேரத்தில் நியாய விலைக் கடைகள் திறந்து செயல்படுதகிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை