மைலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி தேரோட்டம்.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த  மைலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

 இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9 ம் தேதி (மாசி 25) முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. 9 ம் நாள் மார்ச் 17 தேதி (பங்குனி 3) விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற்றது. முன் நாள்  இரவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏறாலமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தவண்ணம் இருந்தனர். அன்று அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் வினாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பம்பை, நாதஸ்வர மேளதாளங்கள், சில வாத்தியம் இசைக்க காலை 5.45 மணிக்கு திருத்தேரில்  அரோகரா கோஷத்துடன் தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்தனர். திருத்தேர் மாடவீதியாக தேர் நிலையை வந்தடைந்தது.

பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த காய்கறிகள் தானியங்கள் தேர் மீது வீசி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பக்தர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு அபிஷேக்குப்தா அவர்கள் தலைமையில் சுமார் 300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை