விழுப்புரம் மாவட்டத்தில் ஏப்ரல் 5-ம் தேதி அன்று 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 38 திட்டப்பணிகள் மற்றும் 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10,722 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் அவர்கள் வழங்கினார்.
முதன்மை நிகழ்வாக விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொழுவாரி ஊராட்சியில் 2 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பயனாளியுடன் இணைந்து திறந்து வைத்தார். அதன் பிறகு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைப்பந்து விளையாடினார். அவ்வளாகத்தினுள் ரூ.2.75 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், மேலும் ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நூலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதனை அடுத்து ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு, 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
இதை அடுத்து திண்டிவனம் வட்டம் பெலாக்குப்பம் சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 6000 தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரில் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும். மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. ஐந்தாவது சமத்துவபுரமாக 2010-2011ஆம் நிதியாண்டில் கொழுவாரி ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் தற்போது மறுசீரமைக்கப் பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சமத்துவபுரம் கொழுவாரி கிராமத்தில் 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் 100 வீடுகள் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் பரப்பளவு 249 சதுர அடி, தலா ஒரு வீட்டின் மதிப்பு 1.92 இலட்சம் என மொத்தம் 100 வீடுகள் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பாக ரு.14.20 இலட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், ரூ.7.59 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப் பணிகள், சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் ரூ.7.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, கைப்பந்து, மற்றும் கபடி மைதானம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞர் விளையாட்டுத்திடல் மற்றும் கலைஞர் விளையாட்டுப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தெருக்களில் ரூ.3.42 இலட்சம் மதிப்பீட்டில் மின்விளக்குகள், ரூ.7.64 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், அனைத்து தெருக்களிலும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பால்வளத்துறை, தாட்கோ, கூட்டுறவுத்துறை, தொழில் வணிகத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 42 கோடியே69 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10,722 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பயனாளிகளிடமும், பொதுமக்களிடமும் நேரடியாக சென்று உரையாடியதோடு, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தங்களை சந்தித்து உரையாடி, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதற்கு பொதுமக்கள் மனமகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் பேசிய அவர், கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட சமத்துவபுரத்தை அவரது மகனாக திறந்து வைத்தில் தமக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு இருண்ட ஆட்சியில் இருந்ததற்கு சமத்துவபுர திட்டம் கிடப்பில் போடப்பட்டதே சிறந்த உதாரணம் என சாடினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என்றும் இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். அதுதான் எங்களுடைய லட்சியம், இலக்கு. இந்திய நாடு வளர்ச்சியடைந்து பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் செயல்பட்டு இருந்தாலும், சாதியும் மதமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று கலைஞர் கூறியிருக்கிறார். இந்த சூழலில் தமிழர்கள் அனைவரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டும் என்ற நோக்கற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சமத்துவபுரம் திட்டம். சாதியும், மதமும் அற்ற சம தர்ம சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவது மட்டுமில்லாமல் தமிழ்நாடே சமத்துவபுரமாக காட்சியளிக்க நாம் பாணியாற்ற வேண்டும். அந்த இலக்கை நோக்கித்தான் தற்போது சமத்துவபுரத்தை சீரமைத்து வருகிறேன் என்றும்,
அண்மையில் தொழில் முதலீட்டுக்கு துபாய் சென்றிருந்த போது அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது ஒரு கருத்தை எடுத்துரைத்தேன். சாதியால், மதத்தால் பிளவு படாமல் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வால் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி என்று நான் கூறுவதற்கு இந்த சமத்துவ சிந்தனைதான் காரணம். இந்த தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். இந்திய நாடே சமத்துவ நாடாகவும், சமூக இந்திய நாடாக மாறவேண்டும். இதற்கு தமிழ்நாடும், திராவிட மாடல் தொடர்ந்து வழிகாட்டும்," என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்;
அதன்படி, திருவெண்ணெய்நல்லூரில் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம், அன்னியூர் ஊராட்சி அலுவலகக் கட்டடம், காணை ஊராட்சி அலுவலகக் கட்டடம், சி.என் பாளையம் ஊராட்சி அலுவலகக் கட்டடம், கஞ்சனூர் ஊராட்சியில் தானிய கிடங்கு, ஆசாரங்குப்பம் ஊராட்சி அலுவலகக் கட்டடம்,
தென்னமாதேவி ஊராட்சி அலுவலகக் கட்டடம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடம், தீவனூர் ஊராட்சி அலுவலகக் கட்டடம், கொனமங்கலம் ஊராட்சி அலுவலகக் கட்டடம், ஆசூர் ஊராட்சியில் பால் சேகரிப்பு மையக் கட்டடம், புலியனூர் ஊராட்சியில் உணவு தானியக் கிடங்கு, மயிலம் ஊராட்சியில் சிறுபாலம், கொடியம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம், பாஞ்சாலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம், செம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமயலறைக் கூடம், ஆமூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம், கொட்டிக்கல்பாறை கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை கட்டடம், தடாகம் ஊராட்சி அலுவலகக் கட்டடம், தென்புத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கட்டடம், வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம், சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 10 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர்,
விழுப்புரத்தில் கனிமம் மற்றும் சுரங்கவியல் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம், விழுப்புரம் நகராட்சி அலுவலகக் கட்டடம், பெரிய தச்சூரில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், ராதாபுரத்தில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், விழுக்கத்தில் துணை சுகாதார நிலையக் கட்டடம், வெளியனூரில் துணை சுகாதார நிலையக் கட்டடம், பிடாகத்தில் கால்நடை மருந்தகக் கட்டடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் பயிற்சி மையக் கட்டடம், அன்னியூரில் துணை வேளாண் விரிவாக்கக் கட்டடம், பரங்கனியில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம், கிளியனூரில் துணை வேளாண்விரிவாக்க மையக் கட்டடம், மரக்காணம் வட்டாரம், சிறுவாடியில் (முருக்கேரி) துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம், வல்லம் வட்டாரம், பென்னகரில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம்; என மொத்தம் 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கா.பொன்முடி, மாண்புமிகு ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.இலட்சுமணன், எ.ஜே.மணிகண்ணன், சி.சிவகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் பி.அமுதா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பிரவீன்.பி.நாயர், இ.ஆ.ப., விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக