தமிழக சிவாலயங்களில் மிகவும் முக்கியமானது நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில். பழைமையான இந்த சிவாலயம் தாமிர சபை என்று பக்தர்களால் போற்றப்படும் நடராஜப்பெருமானின் சந்நிதி அமைந்த பெருமையை உடையது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். அவற்றில் கோயில் யானை காந்திமதியின் பங்கு முக்கியமானது.
காந்திமதி 52 வயதான யானை. மிகவும் சமத்து. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதன் எடை 4450 கிலோ. மருத்துவர் யானை எடை குறையவேண்டும் என்று வலியுறுத்தியபோது தினமும் காந்திமதி மூன்று மணி நேர நடைப்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது. அதன் உணவுப் பழக்க வழக்கத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதற்கெல்லாம் காந்திமதி அளித்த ஒத்துழைப்பு அபரிமிதமானது. ஒரே ஆண்டில் காந்திமதி 300 கிலோ எடை குறைந்தது. இது அதன் உடல் ஆரோக்கியத்துக்கு உதவியது. என்றாலும் வயது முதிர்வு காரணமாக அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று அதற்கு உரிய சிகிச்சையும் கவனிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி பக்தர்கள் நெல்லையப்பர் காந்திமதி மீது பக்தி செலுத்துவதுபோலவே யானை காந்திமதியின் மீது பாசம் செலுத்துபவர்கள். அதன் உச்சமாக இப்போது அவர்கள் செய்திருக்கும் செயல்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நெல்லையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடந்துவருகின்றன. எனவே சாலையில் சில இடங்களில் கல், மண் மற்றும் சில ஆணிகள் ஆங்காங்கே கிடக்கின்றன. நாளை ஆனித் திருவிழா தொடங்க உள்ள நிலையில், தினமும் சுவாமி புறப்பாடு நிகழும். அப்போது யானையும் சுவாமிக்கு முன்பாக நகர்வலம் வரும். காந்திமதி கால் கொலுசுகள் அதிர நடந்துவரும் அழகைக் காணவே பெரும் கூட்டம் கூடும். இந்நிலையில், சாலையில் நடந்துவரும் போது அதன் கால்களை இவை ஏதும் தாக்கி விடக்கூடாதே என்று வருந்திய பக்தர்கள், அதற்கு செருப்பு தைத்துக் கொடுத்துள்ளனர்.
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது எப்படி பாதுகாப்பாக அவர்களுக்கு செருப்பு மாட்டி அழைத்துச் செல்வோமோ அதேபோன்று காந்திமதியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கருதுகிறார்கள். இதற்காக அளவெடுத்து நான்கு செருப்புகள் ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்லி கேரளாவிலிருந்து தருவித்திருக்கிறார்கள். இதன் விலை ரூ.12,000 என்கிறார்கள்.
இந்தச் செருப்பை திருநெல்வேலி இந்து வியாபாரிகள் சங்கம் வழங்கியுள்ளது. இந்தச் செருப்புகளை வியாபாரிகள் கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டபிறகே செருப்பு அணிவிக்கப்படும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது பயன் அளிப்பதைப் பார்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளுக்கும் செருப்பு வழங்க இந்து வியாபாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புகளால் தடைப்பட்டிருந்த கோயில் உற்சவங்கள் தற்போது மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. நெல்லையப்பர் கோயிலில் ஆனி மாதத் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமாக நடைபெறும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்தத் தேர்த்திருவிழாவைக் காண பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தத் தேர்த்திருவிழாவின் போது காந்திமதி செருப்புகள் அணிந்து பாதுகாப்பாக நடந்துவரவேண்டும் என்பதே பக்தர்களின் ஆசை. ஆனால் 'செருப்பெல்லாம் யார் சார் போடுவா' என்பதுபோல காந்திமதி செருப்புகளைப் போட்டுக்கொள்ளவே பயப்படுகிறது. சீக்கிரம் அதற்குப் பயம் விலகி செருப்போடு நடந்து வந்து அழகு சேர்க்கும் என்று நம்புவோம்.
கருத்துரையிடுக