கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் சத்தியஞான சபை. வள்ளலாரின் கொள்கைக்கு மாறாக அங்கு சிவலிங்கம் போன்ற தெய்வங்களை வைத்து சிலர் உருவ வழிபாடு நடத்தியதை எதிர்த்து தொண்டர்குல பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. அதையடுத்து “வள்ளலார் கடந்த 1872-ம்ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின்படி சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது. அங்கு ஜோதி தீபம் மட்டுமே காட்டப்பட வேண்டும்.

அப்போது ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை' என்ற தாரக மந்திரத்தை மட்டுமே மக்கள் அமைதியாக ஓத வேண்டும். வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகளில் லட்சியம் வைக்க வேண்டாம் என வள்ளலார் கூறியுள்ளார். சத்தியஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது என்பதால், அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படியே அந்த சபை நடத்தப்பட வேண்டும். மேலும் சத்தியஞான சபை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சபை நிர்வாகத்தையும், பூஜை முறைகளையும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அறங்காவலர்கள், செயல் அலுவலரையே சாரும்” என்று உத்தரவிட்டிருந்தது இந்து சமய அறநிலையத்துறை.
இந்து அறநிலையத்துறையின் அந்த உத்தரவை எதிர்த்தும், சத்தியஞான சபையில் முறைகேடுகள் நடப்பதாகக் குறிஞ்சிப்பாடி ஜி.சுப்பிரமணியன் என்பவர் அறநிலையத் துறையில் அளித்த மனுவை எதிர்த்தும் சபாநாத ஒளி சிவாச்சார்யர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, "வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்தியஞான சபையில் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிராக உருவ வழிபாடு கூடாது. இதுதொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்” என்று கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து சபாநாத ஒளி சிவாச்சார்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.ராஜா, டி.வி.தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
“வடலூர் வள்ளலார் சத்தியஞான சன்மார்க்க சபையில் உருவ வழிபாடு கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும். அது தொடர்பான இந்து அறநிலையத்துறையின் உத்தரவும் செல்லும்” என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சபாநாத ஒளி சிவாச்சார்யர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
from விகடன் https://ift.tt/jXtvC4N
via IFTTT
கருத்துரையிடுக