ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தை இலட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறும்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி திருத்தேர் விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். நேற்றைய தினம் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
உற்சவ அம்மன் மங்கள சண்டிகை சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார். ஆடி அமாவாசை தினமான நேற்று காலையிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலான. பக்தர்கள் தாடை மற்றும் நாக்குகளில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பெங்களூர், புதுச்சேரியில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கருத்துரையிடுக