வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.
ஆதியும் அந்தமும் இல்லாத ஈசனுக்கும் சக்திதேவிக்கும் திருமண வைபோகம் நடைபெற்ற இடங்கள் இந்தியாவில் பல உள்ளன. அகத்தியர் உள்ளிட்ட பல ஞானியர்களுக்கும் திருமணக் கோலம் காட்டிய இடங்களும் பல உள்ளன. இதில் நடுநாடு எனப்படும் திண்டிவனத்திலும் ஒரு அற்புதமான திருமணத் தலம் ஒன்று உள்ளது. இங்கு சிவசக்தி திருமணம் நடைபெற்றபோது சக்திதேவி கௌரியாக திருமாங்கல்யம் ஏற்று, இந்த தலத்தை திருமண வரம் அருளும் பரிகாரத் திருத்தலமாக மாற்றினாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஈசனும் சக்தியும் மணந்து கொண்ட திருமணத் தலங்கள் ஐந்து வகை என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. அவை...
காக்ஷி விவாஹம்: அதாவது திருமணக்கோலம் காட்டிய தலங்கள்(வேதாரண்யம், திருவேற்காடு, காஞ்சி)
காந்தர்வ விவாஹம்: காந்தர்வ முறைப்படி ஈசனும் சக்தியும் மணந்து கொண்ட தலங்கள் (உத்திரகோசமங்கை, திருவீழிமிழலை)
ப்ரதிக்ஞா விவாஹம்: வாக்கு தந்தபடி ஈசன் அன்னையைக் கரம் பிடித்த தலங்கள் (திருக்கோழம்பம், மதுரை, மயிலாப்பூர்)
ஹாஸ்ய விவாஹம்: ஈசன் லீலை செய்து திருமணம் புரிந்து கொண்ட தலங்கள் (பந்தநல்லூர், குற்றாலம்)
பூலோக ப்ரதிக்ஷ விவாஹம்: முறைப்படி எல்லோரும் புடைசூழ செய்து கொண்ட திருமணம் (திருமணஞ்சேரி, கயிலாயம், திருவாரூர்)
இதில் திண்டிவனம் வெள்ளிமேடுப்பேட்டையில் உள்ள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயத்தில் ஈசனுக்கும் சக்திக்கும் பூலோக ப்ரதிக்ஷ விவாஹம் நடைபெற்றது என்கிறார்கள் ஆன்றோர்கள். அப்போது ஈசனானவர் சப்த ரிஷிகளுக்கும் 'இங்கு வந்து பூஜித்தால், திருமணம் தொடர்பான சகல தோஷங்களும் விலகி, நல்ல வரன் அமைந்து, அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்' என்று வரம் அருளினார் என்கிறது தலபுராணம்.
`வெள்ளிமேடுபேட்டை' என்ற இந்த ஊர் ஆதியில் ‘புத்தனந்தல்’ என்று அழைக்கப்பட்டது. 2500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம், முற்காலப் பாண்டியர்களின் காலத்தில் உருவானது என்பதற்குச் சான்றாக மண்டப விதானங்களில் ஆங்காங்கே மீன் லட்சினை காணப்படுகிறது. இரண்டு நிலை விமானத்தின் கீழ் ஸ்ரீநாகேஸ்வரரும், ஒரு நிலை விமானத்தின் கீழ் திரிபுரசுந்தரி அம்மனும் அமர்ந்து ஆட்சி புரிகிறார்கள். மேலும் ஸ்ரீவிநாயகர் சந்நிதி, ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வயானை சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி சந்நிதி, நால்வர் சந்நிதி, மேற்கு நோக்கிய ஸ்ரீசனீஸ்வரர் சந்நிதி ஆகியவையும் எழிலுற அமைந்துள்ளன. சூரியன், சந்திரன், ராகு ஆகியோரும் தனித்தனியே அருள்பாலிக்கிறார்கள்.

சுக்கிரன் வழிபட்டு நலம் அடைந்த ஆலயம் என்பதால் இது சுக்கிர பலம் ஸித்திக்கும் பரிகாரத் தலம் என்றும் போற்றப்படுகிறது. சுக்கிரன் வழிபட்ட மேடான ஊர் என்பதால் வெள்ளிமேடுபேட்டை என்றானதாம். இங்கு ஈசன் சதுர வடிவ ஆவுடையில் அமர்ந்திருக்கும் கோலம் அபூர்வமானது, சதுர ஆவுடை எனில், அது பிரம்மன் அமைத்த லிங்கத்திருமேனி என்கிறார்கள். லிங்கத்தின் மீது நாகத்தின் செதில்கள் போன்ற அமைப்பு இருப்பது விசேஷ அம்சம்! இந்த நாகேஸ்வர ஸ்வாமியை வழிபட்டால், நாகதோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கும், திருமண வரம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். ஈசனின் சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி திருபுரசுந்தரி அருள்பாலிக்கிறாள். இவள் மங்கல வாழ்வும், மாங்கல்ய பலமும் அளிக்கும் தேவி என்கிறார்கள்.
திருக்காளத்திக்கும் திருநாகேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்த மத்திய ராகு - கேது தலமாக வெள்ளிமேடுபேட்டை அமைந்திருப்பதால், இது ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இங்கே ஈசனை (மேற்கு) நோக்கியபடி சனிபகவான் அருள்கிறார். ஆகவே, இது சனிபகவானுக்கு உரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது (திருநள்ளாருக்கும் தெள்ளாறுக்கும் இடையே அமைந்த மத்திய சனீஸ்வரம் என்றும் கூறுகிறார்கள்). இப்படி ஒரே தலம் சனி, ராகு-கேது, சுக்கிரன் என்று பல கிரகங்களுக்கானப் பரிகாரத் தலமாக இருப்பது, வெகு அபூர்வம்!
ஒருமுறை, திருமாலை அவமதிக்கும் வகையிலான பிருகு முனிவரின் செய்கையைக் கண்டு வெகுண்டெழுந்த திருமகள் வைகுந்தத்தை விட்டு விலகினாள். அவள் பூகோளம் வந்து, நம் தென்னகத்தில் திருமாலை எண்ணித் தவமிருந்த தலங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் பெரியோர்கள். மங்கல வாழ்வு அளிக்கும் ஊர் என்பதால் காஞ்சி மகாபெரியவர் இந்த ஊருக்கு வந்து தங்கி நாகேஸ்வரப் பெருமானைப் பூசித்து மகிழ்ந்திருக்கிறார் என்பதும் ஒரு விசேஷத் தகவல்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
இப்படி பல பெருமைகள் கொண்ட இந்த திருமணத் தலத்தில் வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. காளஹஸ்தி, ராமேஸ்வரம், திருநள்ளாறு, கஞ்சனூர் உள்ளிட்ட தலங்களில் செய்யப்படும் அனைத்து திருமணப் பரிகார சடங்குகளையும் இங்கு ஒருசேர செய்வது சிறப்பினும் சிறப்பானது என்கிறார்கள் ஊர் மக்கள்.
இந்த விரிவான பார்வதி சுயம்வர ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கினார் என்றும் அன்னை பார்வதிக்கு கிடைத்ததைப் போன்ற இனிய துணையைக் கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம் என்றும் ஆன்றோர்கள் கூறுகின்றனர். இந்த ஹோமத்தை வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். எனவே இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!
சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். எல்லா வசதிகளும் இருந்தும் ஏனோ காரணத்தால் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒருவருக்குத் திருமணம் தடைபடுகிறது என்றால், பெரும்பாலும் ஜோதிட அமைப்பும் பித்ரு தோஷமுமே காரணம் என்பார்கள். இந்த இரண்டு வகை தோஷங்களையும் நீக்கி அருள் செய்யும் வரமாக நடக்க இருக்கிறது இந்த சுயம்வர பார்வதி ஹோமம்.
இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் பதிவு செய்து கொண்டு மானஸீகமாக வேண்டிக்கொண்டாலே திருமணம் வரம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஹோமத்துக்குப் பிறகு அளிக்கப்படும் பஸ்பம், குங்குமத்தை ஒரு மண்டல காலத்துக்கு தினமும் தினமும் இட்டு வந்தால், திருமணத் தடை நீங்கி சீக்கிரமே நல்ல துணை கிடைக்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.
கருத்துரையிடுக