மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் இந்த தருணத்தில் திருப்பதிக்கு வரவேண்டாம் .. திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!!

 


 ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது. எனவே, தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலையில், கோடைகால கூட்ட நெரிசல் குறைந்தாலும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஆகஸ்ட் 19-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் அதிகப்படியான பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும், மேலும்

பெருமாளுக்கு உகந்த புனித மாதமான புரட்டாசி மாதம், செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 17-ம் தேதி தான் முடிவடைகிறது. இந்த மாதத்திலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சரியாக தங்கள் பயணத்தை திட்டமிட்டு வரவேண்டும்.

குறிப்பாக இந்த தருணங்களில் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தற்போதைக்கு திருமலைக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும், தரிசன வரிசைகளிலும் பொறுமையுடன் காத்திருக்குமாறும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை