விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசி பெருவிழா முன்னிட்டு இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் மாசி 12 நாள் (24/02/2023) திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழா மாசி 6 ஆம் நாள் (18/02/2023) கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாட்கள் இவ்விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான 2 ஆம் நாள் மாசி -7 (19/02/2023) ஆம் தேதி மயானகொள்ளையும், 5 ஆம் நாள் மாசி -10 (22/02/2023) ஆம் தேதி தீமிதி திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் கருவான 7 ஆம் நாள் மாசி -12 (24/02/2023) ஆம் தேதி இன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்து தீபாராதனை ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன் பனை, வாகை, புளி, காட்டு வாகை உள்ளிட்ட பச்சை மரங்களை கொண்டு புதிதாக உருவாக்கிய திருத்தேரில் பாம்பை, உடுக்கை, கைலாய வாத்தியம், நாதஸ்வர மேளதாளத்துடன் பக்தர்களின் அங்காளம்மனுக்கு அரோகரா, கோவிந்தா கோஷத்துடன் இலட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடக்க மக்கள் வெள்ளத்தில் மிதந்து மாடவீதியாக தேர்நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் மண்டல காவல்துறை தலைவர் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவினை முன்னிட்டு காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் வருகை தந்தவாறு இருந்தனர்
அம்மனுக்கு காணிக்கையாக பக்தர்கள் தங்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த காய்கறிகள், மணிலா, நெல் உள்ளிட்ட தானியங்கள் மற்றும் ஆடு,கோழி மற்றும் சுண்டல், கொழுக்கட்டை தேர்மீது வீசியும் காளி, சிவன், குறத்தி போன்ற வேடங்கள் அணிந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டார்.
விழாவினை இந்த சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்திருந்தனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சுமார் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள் மற்றும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக