விழுப்புரம் நகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி துவக்கி வைத்தார்.
"முதலமைச்சரின் காலை உணவு திட்டம்" தமிழக அரசு தொடக்க பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளான 15/09/2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்திற்கு பலர் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023-24ம் நிதியாண்டில் இருந்து ‘‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’’ விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். அதன்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 56,098 மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் இன்று விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவு அருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக