பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலில், 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம்!!

 

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் கிபி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய, தென் அஹோபிலம் என்று அழைக்கப்படும் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று (30/06/2023) பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மேள, தாளம் மற்றும் மந்திரங்கள் முழுங்க பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. பின்னர் லட்சுமி நரசிம்மர் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 9ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஜூலை 6ஆம் தேதி திருக்கல்யாணம், 7ஆம் தேதி திருமஞ்சனம், 8ஆம் தேதி லட்சுமி நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

செய்தியாளர்:                   மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை