மேல்மலையனூரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல்! அகில உலகிற்கு அரசியாக அங்காளம்மன்!!

  

விழுப்புரம் மாவட்டம் பிரிசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 16/08/2023 புதன்கிழமை ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

உற்சவத்தை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு காலை பால், தயிர், பன்னீர், சந்தனம், கதம்பம் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை ஏற்றப்பட்டது.

உற்சவ அங்காளம்மன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு 10.30 மணிக்கு மேளதாளங்கள் இசைக்க வடக்கு வாசலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டத்தில் அங்காளம்மன் மஹா சாம்ராஜிய தயானி (அனைத்துலகிற்கு அரசி) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காயில் சூடம் ஏற்றி அங்காளம்மன் தாயே! அருள் புரிவாயே!! என வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

செய்தியாளர்:                             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை