செஞ்சி அரசு பள்ளிகளில் 8355 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம்! அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்!!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 8355 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.

காலை உணவு திட்டமானது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் செப்டம்பர் 15/2022 அண்ணா பிறந்தநாளன்று முதல் கட்டமாக மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இதில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் காலை உணவுத் திட்டத்தை 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டது.

மேலும், 2023-24-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ‘‘காலை உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள 30,122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் செயல் வடிவமாக இன்று 

தமிழகத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ள நகர்ப்புற, கிராமபுற பகுதிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்  விரிவாக்கம் செய்து நாகை மாவட்டம் திருக்குவளை அரசு பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  துவக்கி வைத்தார்.  

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப், சங்கராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார். 

பின்னர் சிறப்புரையில் தொடக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த நமது தமிழக முதல்வர் முதலமைச்சர்களுக்கெல்லாம் முதல் அமைச்சர் எனவும் தாய்க்கு தாயான திட்டம் எனவும் இத்திட்டத்தில் செஞ்சி தொகுதியில் செஞ்சி ஒன்றியத்தில் 78 பள்ளிகளில் 4392 மாணவ, மாணவிகளும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 100 பள்ளிகளில் 3974 மாணவ, மாணவிகளும் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுவார்கள் என உரைத்தார்.

நிகழ்ச்சியில் திண்டிவன் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி) செல்வகுமார், செஞ்சி வட்டார தொடக்க கல்வி அலுவலர் சிவக்குமார், செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அரங்க ஏழுமலை, செஞ்சி பேருராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி,  செஞ்சி வட்டாச்சியர் கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட சுப்ரமணி, சீதாலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                              மதியழகன்.


Post a Comment

புதியது பழையவை