மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை ஊஞ்சல் உற்சவம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை, தேங்காயில் சூடம் ஏற்றி வழிபாடு!!

விழுப்புரம் மாவட்டம் பிரிசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

உற்சவத்தை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு காலை பால், தயிர், பன்னீர், சந்தனம், கதம்பம் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை ஏற்றப்பட்டது.

உற்சவ அங்காளம்மன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு 10.30 மணிக்கு மேளதாளங்கள் இசைக்க வடக்கு வாசலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டத்தில் அங்காளம்மன் கணேச ஜனனி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் சூடம் ஏற்றி அங்காளம்மன் தாயே! அருள் புரிவாயே!! என மனமுருகி வழிபட்டனர். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை