நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ 1.27 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கிவைத்தார்.
விழுப்புரம் மாவட்டம்பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டத்தின் கீழ் செஞ்சி ஒன்றியம் நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல், ஒன்றிய கவுன்சிலர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ. மஸ்தான் கலந்து கொண்டு 1 கோடியே 27 லட்சத்தி 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மஸ்தான் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிகோப்பையினை வழங்கினார். இதையடுத்து பள்ளி வளாகத்தில் அமைச்சர் மஸ்தான் மரக்கன்றினை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் பிரவீன் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன், செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கல்பனா, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக