செஞ்சியில் நடைபெற்ற அதிமுக 52 -ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டை திமுக அழித்து வருகிறது- முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில், அதிமுக 52- வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை செஞ்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி எதிரே நடைபெற்றது. செஞ்சி நகர கழக செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வருவதே திமுகவின் கைவந்த கலை என்றும் தமிழ், தமிழ் என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டை அழிப்பது தான் திமுகவின் நோக்கம் எனவும் திமுகவால் ஒருபோதும் நீட் விளக்கை அமல்படுத்த முடியாது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நீட் விளக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பாரா என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் மருத்துவ சீட்டு காலக்கெடு முடிந்து 86 சீட்டுகள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் திமுகவும், தமிழக பாஜக தலைவரும் என்ன செய்யப் போகிறார்கள் என சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார். 

மேலும், தேர்தலுக்கு முன் தமிழகத்தில் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு தற்போது தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு மாத மாதம் கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கின்றனர் இது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு உள்ளதற்கு ஆளுநர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு நிகழ்வே சாட்சி என்றும் இது தொடர்பாக திமுகவினரிடம் விசாரணை செய்யப்படுமா? என தமிழக டிஜிபிக்கு கேள்வி எழுப்பிய அவர் திமுக அரசின் அமைச்சரவை கூட்டம் புழல் சிறையில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் விமர்ச்சனம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் முத்துசாமி, மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், செஞ்சி ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, அருண்தத்தன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர், விவசாய அணி மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்:                               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை