செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் தேர்வானதை அடுத்து இன்று அமைச்சர் மஸ்தான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் மகளிர் பிரிவில் குறு மைய அளவிலும், மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் விளையாடி முதலிடம் பிடித்தனர். இப்பள்ளி மாணவிகள் டிசம்பர் 2ஆம் தேதி மாநில அளவில் திருச்சியில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செஞ்சியில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாநில அளவில் பங்கேற்க உள்ள மாணவிகளுக்கு அமைச்சர் மஸ்தான் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து டிசம்பர் 2 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் 18 மாணவிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரண பொருட்கள் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியர் அலி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதுமட்டுமன்றி மாநில அளவில் வெற்றி பெற்றால் அந்த மாணவிகளை இலவச சுற்றுலா அழைத்து செல்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவேந்திரன், உடற் கல்வி ஆசிரியர்கள் ஆனந்தராஜ், பழனிராஜ், ஆசிரியர்கள் திலிப், சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக