விழுப்புரத்தில் 410 ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார் அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும். தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கலந்து கொண்டு 410 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 3 கோடியே 65 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கும், பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய(19/12/2023) தினம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ், 581 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 564 விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களாகும், 17 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான 320 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.1,23,50,000/- நிதியுதவி வழங்கப்பட்டது.
அன்னை தெரசா நினைவு மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், 90 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 68 விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களாகும், 02 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான 37 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.13,25,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 308 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 92 விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களாகும், 24 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 192 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான 53 பயானிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.19,75,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேற்காணும் திட்டங்களின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிடும் வகையில், நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக பட்டப்படிப்பு படித்த 216 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் தலா ரூ.50,000/- நிதியுதவியும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த 194 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் தலா ரூ.25,000/- நிதியுதவி என மொத்தம் 410 பயனாளிகளுக்கு 1,56,50,000/- நிதியுதவி மற்றும் ரூ. 2,08,59,000/- மதிப்பீட்டில் 3,280 கிலோ கிராம் தங்கம் என மொத்தம் ரூ.3,65,09,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக