விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைப்பு!

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிடும் வகையில், நிவாரணப் பொருட்கள் கொண்டும் செல்லும் லாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.12.2023) கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

ஆட்சியர் பழனி தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் பெருமளவில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவியினை வழங்கி வருகிறார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, கடந்த 06.12.2023 அன்றைய தினத்திலிருந்து மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில், 75,644 எண்ணிக்கையிலான வாட்டர் பாட்டில், 2,270 எண்ணிக்கையிலான பிரெட் பாக்கெட், 17,882 எண்ணிக்கையிலான பிஸ்கட் பாக்கெட், 2000 எண்ணிக்கையிலான பால் பாக்கெட், 8001 எண்ணிக்கையிலான அரிசி உட்பட மளிகைப்பொருட்கள், 469 எண்ணிக்கையிலான சமையல் எண்ணெய், 100 எண்ணிக்கையிலான டவல், 230 எண்ணிக்கையிலான நாப்கின்கள், 50 எண்ணிக்கையிலான நைட்டிகள், 135 எண்ணிக்கையிலான லுங்கிகள், 825 எண்ணிக்கையிலான பெட்ஷீட்கள், 825 எண்ணிக்கையிலான ஆடைகள், 100 எண்ணிக்கையிலான இதர பொருட்கள் ஆகியவை 7 லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கி.அரிதாஸ், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் அருண் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                              மதியழகன். 

Post a Comment

புதியது பழையவை