செஞ்சிக்கோட்டை ஸ்ரீ கமலக்கன்னியம்மன் திருத்தேரோட்டம்! ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து அம்மன் தரிசனம்!!

 

செஞ்சி: வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரகணகான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்து அருள்பாலித்து வரும் இராஜகிரிகோடை மலைமீது ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத்தில் ஸ்ரீராஜகாளியம்மன், செஞ்சி நகரத்தில் ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு ரத உற்சவ திருவிழா கடந்த 13-ம் தேதி(சித்திரை -30) திங்கட்கிழமை காலை கொடியேற்றுதலுடன் தொடங்கி அன்று மாலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா 20-ம் தேதி(வைகாசி -7) திங்கட்கிழமை வரை 8 நாட்கள் நடைபெற்று வந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 21 -ம் தேதி(வைகாசி -8) செவ்வாய்க்கிழமை 9 -ம் நாளான இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை ஸ்ரீகமலக்கன்னியம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன் உள்ளிட்ட மூலவர் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீப ஆராதனைகள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு செஞ்சி மந்தைவெளி திடலில் இருந்து 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது.

பகல் 2.30 மணி அளவில் அலங்கரிப்பட்ட திருத்தேரினில் பல்வேறு மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீகமலக்கன்னியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார் தொடர்ந்து மங்கள மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஆயிரகணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா கரகோஷத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். தேர் செஞ்சி மந்தைவெளியில் இருந்து திருவள்ளுவர் தெரு வழியாக திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, சத்திர தெரு வழியாக தேர் நிலையை அடைந்தது. 

விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான், மைலம் சட்டமன்ற உறுப்பினர் சி. சிவகுமார், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆர்.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

10 -ம் நாள் நாளை 22 -ம் தேதி(வைகாசி -9) புதன்கிழமை மஞ்சள மஞ்சள் நீராட்டு விழாவும் தொடர்ந்து ஸ்ரீகமலக்கன்னியம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய தெய்வங்கள் பிரியாவிடை பெற்று தங்களது திருத்தலத்திற்கு | செல்லும் நிகழ்ச்சியும் காப்பு களைதலும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அரங்க. ஏழுமலை, உபயதாரர்கள், கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை