Top News

செஞ்சி வேளாண் அலுவலகத்தில், பெயரளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வேளாண்துறை அலுவலகத்தில், நவ.15 வெள்ளியன்று செஞ்சி வட்டார விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செஞ்சி வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதகாப்பு சங்கத்தினர் சிலர், காங்கிரஸ் விவசாய பிரிவினர் சிலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் சார்ந்த தகவல்கள், உபகரணங்கள் எட்டா கனியாக உள்ளன, விதைகள் முளைப்புத் தன்மை 50 விழுக்காடு மட்டுமே உள்ளது அதிலும் கலப்பட விதைகள் உள்ளன என தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். விதைகள் குறித்த கேள்விகளுக்கு உதவி விதை அலுவலர் குமார் வேளாண் அலுவலகத்தில் கிடைக்கும் விதைகள் 80 விழுக்காடு கண்டிப்பாக முளைப்புத் தன்மை கொண்டது என விளக்கம் அளித்தார்.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். செஞ்சி வட்டார பாமர விவசாயிகள் இல்லாமல் பெயரளவில் மட்டுமே இந்த வட்டார விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி வட்டார பகுதியில் பெருமளவு மக்கள் விவசாயிகள் தான். இருப்பினும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் குறித்து முன்கூட்டிய தகவல் தெரிவிக்காத தால் பெருமளவு விவசாயிகள் கலந்துகொள்ள இயலவில்லை. இனிவரும் காலங்களில் ஏனும் வேளாண் நிர்வாகம் விவசாயிகளுக்கு முறையாக முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னர் இது போன்ற குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பெற்றால் இப்பகுதியில் உள்ள பெருமளவு விவசாயிகள் பயனடைவார்கள் என கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறினர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை