செஞ்சியில் செல்போன் மற்றும் சைக்கிள் கடையில் தீ விபத்து! ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!!


செஞ்சி காந்தி பஜார் வீதியில் செல்போன் மற்றும் சைக்கிள் கடையில் பயங்கர தீ விபத்து. இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம், விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையால் தீ அருகில் உள்ள கடைகளில் பரவாமல் தடுப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் அன்னை அஞ்சுகம் அம்மாள் பேருந்து நிலையம் எதிரே கலீல் என்பவருக்கு சொந்தமான இரண்டு தளங்கள் கொண்ட WSB மொபைல் போன் மற்றும் சிறார் மிதிவண்டி கடை இயங்கி வருகிறது. செஞ்சி காந்தி பஜார் வீதி என்பதால் எப்பவும் கூட்டமாகவே காணப்படும், சம்பவத்தின் போது கடை உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தரைதளத்தில் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது, இரவு சுமார் 7.45 மணியளவில் முதல் தளத்தில் திடீர் தீ ஏற்பட்டு தீயுடன் புகை வெளிப்பட்டதை கண்ட பொதுமக்கள் கடை உரிமையாளர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சில நொடிகளில் தீ தலம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை விழுப்புரம் உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான செஞ்சி சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் கொழுந்து விட்டு எரிந்த தீயினை தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் தரைத்தளம், இரண்டாம் தளம் மற்றும் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.


இதில் அந்த தளத்தில் இருந்த மொபைல் போன் உதிரி பாகங்கள், சிறார்களுக்கான 150 க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள், பெண்களுக்கான கைப்பைகள் என சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் கருகியது. மேலும் தீ வெப்பத்தின் காரணமாக கான்கிரீட்கள் பெயர்ந்து விழுந்தது சேதமடைந்தது. தீ விபத்து குறித்து செஞ்சி காவல் துறையினர் தீ மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ் மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை