செஞ்சியில் மாவட்டத் தொழில் மையம் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மாவட்டத் தொழில் மையம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.22) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் சி. அருள் தொடங்கி வைத்துப் பேசியதாவது, உற்பத்தி, சேவை மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் udyamregistration.gov.in என்ற இணையதளம் மூலம் எளிதாகவும், கட்டணமின்றியும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், உதவிகளைப் பெறவும், இரு அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும் பதிவுச் சான்றிதழ் அடையாள அட்டையாக பயனளிக்கும். எனவே, இந்த மாவட்டத் தைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள், சான்றிதழ் பெறுவதால் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொண்டு உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அரசுக் கொள்முதல் சந்தைப் பதிவு, மேலும் பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமையால் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்காக உள்ள சமாதான் தளம் போன்றவற்றை அறிந்து அதன் மூலம் பயன்பெறவேண்டும்.

தொழில்முனைவோர் பெறவேண்டிய ஒப்புதல்கள், உரிமங்கள், இசைவுகள், அவைகளைப் பெறும் முறைகள், ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு, ஐஎஸ்ஐ, ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்கள் பெறும் முறைகள் போன்றவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும். இது உங்களுக்கும் பெரும் பயனளிக்கும் என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை