விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையத்தில், செஞ்சி நகர இந்து முன்னணி சார்பில், இந்து கடவுள் ஐயப்பன் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் பாடி இழிவு படுத்திய இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது இந்தியா முழுவதிலுமிருந்து இந்துக்கள் பலர் கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்ப சுவாமியை வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் நடத்தி வரும் கல்ச்சுரல் சென்டர் சார்பில் நடத்தப்பட்ட "மார்கழியில் மக்களிசை 2023" என்ற நிகழ்ச்சியில் "I AM SORRY IYYAPPA, நான் உள்ள வந்தா என்ன தப்பா நான் தாடிக்காரன் பேத்தி" என்று இந்துக்களின் தெய்வங்களை, இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக பெண் பாடகி இசைவாணி என்பவர் பாடியுள்ளார்.
இந்தப் பாடலை தற்போது பெரும்பாலான இந்துக்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்ப சுவாமியை வழிபடும் இந்த நேரத்தில் அவர்களின் மனது புண்பட வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இதனால் ஐய்ப்ப பக்தர்கள் மற்றும் இந்து மதத்தினரின் மனம் மிகவும் புண்பட்டு வருகின்றது.
மேலும், இசைவாணி என்பவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் இவருக்கும் ஐயப்பனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இருப்பினும் இந்து மதத்தின் மீதும், ஐயப்ப பக்தர்களின் மீதும் கொண்ட வெறுப்பின் காரணமாக இம்மாதிரியான பாடல்களை பாடி வருகிறார்.
ஆகவே இந்த பாடலை YOUTUBE இல் வெளியிட்டுள்ள நீளம் கல்ச்சுரல் சென்டரின் மார்கழியில் மக்களிசை சேனல் மீதும், அந்த பாடலை பாடிய இசைவாணி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் மேலும், நீளம் கல்ச்சுரல் சென்டரில் மார்கழியில் மக்களிசை YOUTUBE பக்கத்தில் இருந்து இந்த பாடலை நீக்கி மதக்கலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பாதுகாத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்படுகிறது.
இதில் செஞ்சி நகர இந்து முன்னணி நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்ட ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பலர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக