கோட்டகுப்பம் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்து, கடத்திய நபரை கோட்டகுப்பம் காவல் துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டகுப்பம் ரவுண்டானா அருகில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் காவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது அவ்வழியாக வந்த KA 05 NH 4586 என்ற எண் கொண்ட மகிழுந்தினை(Maruti Breeza Car) காவலர் நிறுத்த கூறிய போது வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. இந்த செயலினால் சந்தேகித்த காவலர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று சுற்றி வளைத்து சினிமா பாணியில் மடக்கி பிடித்து வாகனத்தை சோதனை செய்தனர்.
சோதனையின் போது வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆசாராம் (32) த/பெ தேவாரம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் 12,000 பாக்கெட்டுகள், விமல் பாக்கு 12,000 பாக்கெட்டுகள், Vi tobacco 12,000 பக்கெட்டுகள் என மொத்தம் 274 கிலோ எடை கொண்ட 36,000 பாக்கெட்டுகள் புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் கைப்பற்றி குற்ற செயலில் ஈடுபட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக