1330 திருக்குறள், 9 சார்ட், 5×7 திருவள்ளுவர் ஓவியம்! அரசு பள்ளி மாணவி பிரதிக்ஷா சாதனை!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் களவாய் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் - கோகிலா தம்பதியின் மகள் பிரதிக்ஷா(11), மேல்கலவாய் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழக அரசு நடத்திய கலைத்திருவிழாவில் ஓவியப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு கன்னியாகுமரியில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா காணுவதையொட்டி திருக்குறள் போட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் மாணவி பிரதிக்ஷா கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

திருக்குறள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என என்னிய நிலையில், சமீபத்தில் ஃபெஞ்சல் புயலின் போது பள்ளி தொடர் விடுமுறையில் வீட்டிலிருந்த போது (டிச.11 முதல் 15 வரை) 5 நாட்களில் 26 மணிநேரம் செலவிட்டு, 9 சார்ட்டில் 5 அடி அகலம், 7 அடி நீளத்தில் திருவள்ளுவர் ஓவியத்தை 1330 திருக்குறளை கொண்டு வரைந்து அசத்தியுள்ளார். இச்சாதனையை ஆல் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

சாதனை படைத்த மாணவி பிரதிக்ஷாவை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி நேரில் சந்தித்து புதிய மிதிவண்டி பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திண்டிவனம் தொடக்க கல்வி அலுவலர் அருள், வல்லம் வட்டார கல்வி அலுவலர் முருகன், தலைமை ஆசிரியர் பாஸ்கரன், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு பிரதிக்ஷாவை பாராட்டினர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை